Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 12.20

Maṇimēkalai urai 12.20

Language
Tamil

12.20

பாத்திரம் பெற்ற காதை

140

145 வாய்வ தாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங்
கறவண அடிகள் தம்பாற் பெறுமின்
செறிதொடி நல்லீர் உம்பிறப் பீங்கிஃ
தாபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென வெழுந்தெனள் இளங்கொடி தானென

138

உரை

146

வாய்வதாக மானிடயாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கீங்கு-நுங்கட்கு இப்பொழுது மனித உடலால் தீவினைகளை அறுக்கவல்ல செய்தவம் வாய்ப்புடைத்தாகுக, அறவண வடிகள் தம்பால் பெறுமின் செறிதொடி நல்லீர் உம் பிறப்பு - செறிந்த வளையல்களை யணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவண வடிகள்பால் அறிந்துகொள்ளுமின், ஈங்கிஃது ஆபுத்திரன் கை அமுத சுரபிஎனும் மாபெரும் பாத்திரம்-இங்கிருக்கின்ற இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமைமிக்க பாத்திரமாகும், நீயிரும் தொழும் என - இதனை நீவிரும் வணங்குவீர் என்று கூற, தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் - வணங்கித் துதித்த மாதவி சுதமதியுடன், பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுக என எழுந்தனள் இளங்கொடி தான்என்-குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண வடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் நீவிரும் எழுக எனவுரைத்து மணிமேகலை எழுந்தனள் என்க.

செய்தவம் வாய்வதாக எனவும், பிறப்பு பெறுமின் எனவும் கூட்டுக. தொழுமெனக்கூறி எழுகென எழுந்தனளென்க ;

மணிபல்லவத்தில் தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை நோக்கித் திரிய, தீவதிலகை தோன்றி 'யார் நீ' என்றலும், 'கேளாய், என் வரவு ஈது; பயன் இது; அன்னாய், நீ யார்?' என்றலும் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், என்றுரைத்தலும், மணிமேகலை விரும்பிப் பீடிகையைத் தொழுது வணங்கிக் கூடி வலஞ்செய்து நிற்றலும், அவள் கையிற் பாத்திரம் புகுந்தது ; புகுதலும் மகிழ்வெய்தி, 'வாழ்த்தல் என்னாவிற்கடங்காது' என்றாள்; என்ற ஆயிழை முன்னர்த் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், 'கண்டனை' என்றலும், மணிமேகலை 'சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என, அவளுரைப்ப, மணிமேகலை வணங்கி ஏத்தி வலங்கொண்டு எழுந்து, மயங்குவோள் முன்னர் வந்து தோன்றிக் களைந்து கூறும்; கூறுகின்றவள், தொழுமென, தொழுதேத்திய அவரொடும் இளங்கொடி எழுந்தனள் என வினை முடிவு செய்க.

Linked texts (1)