Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 14

Maṇimēkalai urai 14

Language
Tamil

14.1

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

5

10 மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய
ஆபுத் திரன் றிறம் அணியிழை கேளாய்
வார ணாசியோர் மறையோம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென் றிசைக் குமரி யாடிய வருவோள்
சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை
ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித்
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத்

1

உரை

10

மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய - பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த, ஆபுத்திரன் திறம் அணியிழை கேளாய் - ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய கேட்பாயாக, வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் - காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் - மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து - மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி - கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம் தண்டத்திற்குப் பயந்து, தென்றிசைக் குமரி ஆடிய வருவோள் - தென் திசையிலுள்ள குமரியின்கண் நீராடும் பொருட்டு வருகின்றவள், சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை - அனைவரும் உறங்குவதற்குக் காரணமாகிய இருளில் வழியிடத்திலே சூல் முதிர்ந்த பருவத்தில், ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி - பெற்ற குழந்தைக்குச் சிறிதும் இரங்காதவளாய், தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க - கட்புலனாகாத ஒரு தோட்டத்திலே இட்டுச் செல்ல ;

திறம்-வரலாறு. மறை ஓம்பாளன்-வேதத்தைப் பாதுகாப்பவன். உவாத்தி - உபாத்தியாயன் என்பதன் சிதைவு ; இஃது உவாத்தியன் ; உவாத்தியான் எனவும் வழங்கும். பார்ப்பனி - பார்ப்பான் மனைவி ; மறையோரிற் கணவனைப் பார்ப்பான் என்றும், மனைவியைப் பார்ப்பனியென்றும் கூறுவர். காப்பு-நிறைக்காவல். காப்புக் கடை கழிந்து - கற்பொழுக்கம் நீங்கி யென்றபடி. தண்டம் - மறுமையில் எய்தலாகும் தண்டனை. குமரி-குமரியாறு; கடலுமாம். ¹''தொடியோன் பௌவம்'' என்பதன் உரை காண்க. ஆடிய : செய்யிய வென்னும் வினையெச்சம். முதிர் பருவத்து - முதிர்ந்த பொழுதிலே. தோன்றா - மறைவிடத்துள்ள. துடவை - தோட்டம் ; ²''தொய்யாது வித்திய துளர்படு துடவை'' என்பது காண்க.

1 சிலப். 8 : 1. ² மலைபடு. 122.

14.2

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

தாயில் தூவாக் குழவி துயர் கேட்டோர்
ஆவந் தணைந்தாங் கதன்றுயர் தீர
நாவால் நக்கி நன்பா லூட்டிப்
போகா தெழுநாட் புறங்காத் தோம்ப

11

உரை

14

தாயில் தூவாக் குழவி துயர் கேட்டு - உண்ணாது பசித் துன்பத்தால் அழுகின்ற தாயற்ற குழந்தை ஒலியைக் கேட்டு, ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர - ஒரு பசு ஆண்டு வந்து சேர்ந்து அக் குழவியின் பசித்துன்பம் நீங்க, நாவால் நக்கி நன்பால் ஊட்டி - நாவினால் நக்குதல் புரிந்து தனது இனிய பாலை உண்பித்து, போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப-ஏழு நாள்வரை அக்குழவியை விட்டு நீங்காமல்
பாதுகாக்க ;

தூவாமை - உண்ணாமை, துயர்-துயரினால் அழுது கூப்பிடும் ஒலி : ஆகுபெயர், ¹;'' தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம்நின்னுடற்றியோர் நாடே'' என்பது அறியற்பாலது. குழவித் துயரென்பதும் பாடம். புறங்காத்தல் - பாதுகாத்தல்; ²''வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப'' என்றார் தொல்காப்பியனாரும். புறங்காத்து ஓம்ப : ஒருபொருட் பன்மொழி. ஆவானது பாதுகாத்தமையின் இவனுக்கு ஆபுத்திரன் என்பது பெயராயிற்று.

1 புறம். 4. ² தொல். செய்.சூ. 110.

14.3

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

15

20 வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி யென்போன்
குழவி யேங்கிய கூக்குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீ ருகுத்தாங்
காமக னல்லன் என்மகன் என்றே
காதலி தன்னொடு கைதொழு தெடுத்து

15

உரை

20

வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் - வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஒரு மறையவன், இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்-இளம்பூதி என்னும் பெயருடையவன் வழியிடை வரும்பொழுது, குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு-குழந்தை அழுத கூப்பீட்டொலியைக் கேட்டு, கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்தாங்கு - கலந்த துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ஆமகன் அல்லன் என் மகன் என்றே-இக்குழந்தை பசுவின் மகன் அல்லன் என்னுடைய புதல்வனே என்று கூறி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து - தமக்கு மகப் பேற்றினையளித்த கடவுளைக் கைகூப்பி வணங்கி மனைவியுடன் குழந்தையை எடுத்து ;

பின் காதலி தன்னொடு என்னலால், மனைவியுடன் வருவோன் என்க. இளம்பூதி-இப்பெயர் பூதியெனவே இக் காதையுட் பின்வருகிறது. ஆவானது பாதுகாத்தலைக் கண்டமையின் 'ஆமகனல்லன்' எனக் கூறினான். நாவிடை - நாவினால். நன்னூல்-வேதன் வேதாங்கம் முதலியன. அக் குழவியைத் தனக்களித்தது தெய்வமென்றெண்ணி அத் தெய்வத்தைத் தொழுதன னென்க.

14.4

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

25
நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத்
தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி
மார்பிடை முந்நூல் வளையா முன்னர்
நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி
ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம்
நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின்

21

உரை

26

நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நன் கிளை பொலிவுறுக என்று, தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மறையோதும் அந்தணர்கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ;

முந்நூல் - பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால். நவிற்றி - கவிற்றி வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வத்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல் இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி.

14.5

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

30

அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்
குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்
கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்றாங்
கஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு
நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக்

27

உரை

34

அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்- அவன் அவ்வூரில் ஒரு மறையவன் வீட்டினுட்சென்றவன், ஆங்குப் புலை சூழ் வேள்வியில்-அவ்விடத்தில் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச் சாலையில், குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி-தொடுக்கப்பட்ட நிறமமைந்த மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டு, வெரூஉப் பகை அஞ்சி வெய் துயிர்த்துப் புலம்பி - அச்சத்தைத் தருகின்ற பகைக்கு அஞ்சி வெவ்விதாக மூச்செறிந்து வருத்தமுற்று, கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - கொலைத் தொழில் புரியும் வேடருடைய வில்லிற்குப் பயந்து, வலையிடைப்பட்ட மானே போன்று - வலையின்கண் அகப்பட்ட மானைப்போல, ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு - ஆண்டு அச்சத்துடன் நின்று கூப்பிடும் பசுவின் துன்பத்தைக் கண்டு, நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து-உள்ளம் நடு நடுங்கி மிக்க கண்ணீரைச் சொரிந்து ;

புலை-புன்மை; கீழ்மையுடைய ஊன் தின்றலுக்காயிற்று. வேள்வி யென்பதும் வேள்விச்சாலைக்கு ஆகுபெயர். பகையை அஞ்சியென இரண்டாவது விரித்தலுமாம். புலம்பி - வருத்தமுற்று. கொடுமரம்- வில் ; அம்பெய்தலை யுணர்த்தி நின்றது.

14.6

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

35

கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட
நள்ளிருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்தாங் கொருபுடை ஒதுங்கி
அல்லிடை யாக்கொண் டப்பதி அகன்றோன்
கல்லதர் அத்தம் கடவா நின்றுழி

35

உரை

39

கள்ளவினையில் கடுந்துயர் பாழ்பட - இப்பசுவினது மிக்க துன்பம் இல்லையாம்படி திருட்டுத்தொழிலால், நல்லிருள் கொண்டு நடக்குவன் என்னும் - செறிந்த இருளின்கண் இதனைக்கொண்டு செல்லுவேன் என்கின்ற, உள்ளம் கரந்து ஆங்கு ஒருபுடை ஒதுங்கி - தன் எண்ணத்தை மறைத்து அவ்விடத்தில் ஒரு பக்கம் மறைந்திருந்து, அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன் - இரவில் பசுவைப்பற்றி அவ்வூரைவிட்டு நீங்கினோன், கல்அதர் அத்தம் கடவா நின்றுழி-பருக்கைக் கற்கள் பொருந்திய சின்னெறியை யுடைய அருவழியைத் தாண்டிச் செல்லும்பொழுது ;

நள்ளிருள் - செறிந்தவிருள் ; நளி யென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பாழ்பட வினையிற்கொண்டு எனக் கூட்டுக. என்னும்உள்ள முடையனாய் அதனைக் கரந்து என விரித்துரைக்க. ¹''கல்லத ரத்தங் கடக்க'' என்றார் இளங்கோவடிகளும்.

¹ சிலப். 14 : 57.

14.7

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

40

45 அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம்
கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி
ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய
நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச்சிறு மகனே போக்கப் படுதியென்
றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப

40

உரை

45

அடர்க்குறு மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்குதலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு அந்தணர் அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில் அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு, ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத் திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு, நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால், புலைச் சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய் என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால் அடித்துக் கேட்க ;

அடர்க்குறு - பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச் செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின் புலைச்சிறுமகன் என்றார். உரையாய் உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப்படுதல்-தண்டத்தினின்றும் அகற்றப்படுதல். மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை யல்லாய் ; மக்கட்டன்மை யில்லாய் ; ¹"மகனல்லை மன்ற வினி" ²"மகனல்லான் பெற்ற மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப் பாடங்கொள்ளலும் ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல.

¹ கலி. பாலை, 19: 6. ² கலி. மருதம், 19: 13.

14.8

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

ஆட்டிநின் றலைக்கும் அந்தண ருவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக்
காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்தோட

46

உரை

48

ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை - மிகவும் வருத்திக்கொண்டு நின்ற பார்ப்பன உவாத்தியை, கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்து - கொம்பினால் குத்திக் குடரைப் பிடுங்கி, காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட-காட்டின்கண் அந் நல்ல பசுவானது விரைந்தெழுந்து ஓட ;

ஆட்டி அலைக்கும் : ஒரு பொருட் பன்மொழி. புய்த்துறத்து - பறித்தலைச் செய்து; ¹"புய்த்தெறி கரும்பின் விடுகழை" என்பது காண்க. கதழ்ந்து-விரைந்து; கதழ்வு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது.

¹ புறம்.28

14.9

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

50

55 ஆபுத் திரன்தான் ஆங்கவர்க் குரைப்போன்
நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முதுமறை அந்தணிர் முன்னிய துரைமோ

49

உரை

56

ஆபுத்திரன் தான் ஆங்கவர்க்கு உரைப்போன்-ஆபுத்திரன் அம் மறையோர்க்குக் கூறுகின்றவன், நோவன செய்யன்மின் - வருந்துதற் குரியவற்றைச் செய்யாதீர். நொடிவன கேண்மின்- யான் கூறுவதனைக் கேட்பீராக, விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து- அரசனால் விடப்பட்ட மேய்புலத்தில் தானே உண்டாகிய புற்களை மேய்ந்து, பிறந்தநாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால் - நாம் பிறந்தநாள் தொடங்கிச் சிறப்புடைய தனது இனிய பாலை, அறம் தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் - அறம் பொருந்திய உள்ளத்தோடும் அருண்மிகுந்து உண்பிக்கும், இதனொடு வந்த செற்றம் என்னை - இப் பசுவினிடம் நுமக்குண்டாய சினம் யாது, முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ - தொன்மறை யுணர்ந்த அந்தணர்கள் நும் எண்ணத்தைக் கூறுவீர் என ;

விடுநிலம் - பயிர் செய்யாது விட்ட தரிசுநிலமுமாம். இதனொடு : உருபு மயக்கம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது ; அதனைக் கோறல் துணிந்தனராகலின் 'செற்ற மென்னை' என்றான். இதன் பொருட்டு மக்கட்கு எத்துணையும் உழைப்பும் கேடும் இல்லையென்பான், 'விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து' என்றும், மக்கள் யாவரும் குழவியாய் உதித்த ஞான்றுதொட்டு உயிர் துறக்குங்காறும் என்பான், 'பிறந்தநாள் தொட்டும்' என்றும், இனிமையினும் உடற்குறுதி பயத்தலினும் மேம்பட்டதென்பான் 'சிறந்த தன் தீம்பால்' என்றும், கைம்மாறு கருதாது இரக்கத்தால் தானே உண்பிப்பதென்பான், 'அருள் சுரந் தூட்டும்' என்றும், இவ்வாற்றால் தாய் போல்வதாகிய இதனைக் கோறல் கருதிய நும் வன்கண்மை இருந்தவாறென்னென்பான், இதனொடு வந்த செற்ற மென்னை' என்றுங் கூறினான். என வென்று ஒரு சொல் வருவிக்க.

14.10

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

60

பொன்னணி நேமி வலங்கொள்சக் கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய
அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ்
ஆமக னாதற் தொத்தனை அறியாய்
நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும்

57

உரை

62

பொன் அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னாலாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதலவன் மகன் எமக்கு அருளிய- நிலைபெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடைய மகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும் ;

வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெருமரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார், 'ஆ மகனாதற் கொத்தனை' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள் முன் உரைத்தமை காண்க.

14.11

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

65

ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென்
றோங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலு முண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ
நான்மறை மாக்காள் நன்னூ லகத்தென

63

உரை

69

ஆன்மகன் அசலன் - அசலன் என்பவன் பசுவின் மகன், மான் மகன் சிருங்கி-சிருங்கி என்பான் மானின் மகன், புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன், புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் - மேலோர் போற்றும் கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ, ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம் என்று, ஓங்குயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும் உண்டாகலால், ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம் உண்டோ என வினவ ;

புரையோர் போற்றும் கேசகம்பளனெனக் கூட்டுக. உண்டால்- உண்டாதலால்; ஆல்: அசையுமாம். ஆவொடு - ஆவால். அழிகுலம் - இழிகுலம். நன்னூலகத்து ஆவினால் அழிகுலமுண்டாயதென்று கூறப்பட்டுள்ளதோ என்றபடி. 'ஆமகனாதற் கொத்தனை' என அந்தணர் இகழ்ந்தனராதலின், அதனைப் பரிகரித்தற்கு 'ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என்றான்.

14.12

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

70

ஆங்கவர் தம்முளோர் அந்தணன் உரைக்கும்
ஈங்கிவன் தன்பிறப் பியானறி குவனென

70

உரை

71

ஆங்கவர் தம்முள் ஒரு அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என - அம் மறையவர்களுள் ஒருவன் இவனுடைய பிறப்பை யான் அறிவேன் என்று கூறுவான் ;

14.13

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

75
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக்
குமரி பாதங் கொள்கையின் வணங்கித்
தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை
யாது நின்னூர் ஈங்கென் வரவென
மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும்

72

உரை

77

நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறை எய்தி-வேத விதிப்படி சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின் திருவடிகளை முறைமையால் வணக்கஞ் செய்து, தமரில் தீர்ந்த சாலி என்போள்தனை - தனக்குச் சிறந்தோரினின்றும் நீங்கிய சாலி என்பவளை, யாதி நின் ஊர் ஈங்கு என் வரவு என - நின் ஊர் யாது நீ ஈண்டு வந்த காரணம் என்ன என்று கேட்க, மாமறையாட்டி வருதிறம் உரைக்கும் - அம் மறையவள் தான் வந்த வரலாற்றைக் கூறுபவள் ;

நடவை - வழி ; வழிச்சேறல். நல்கூர்தல் - ஈண்டு இளைத்தல் ; ¹''நல்கூர் நுசுப்பினை'' என முன் வந்தமையும் காண்க. குமரி - குமரிக் கடலின் மருங்குள்ள தெய்வம் ; கன்னி ; பகவதி. கொள்கை - நோன்புமாம். வடமொழியாட்டி - பார்ப்பனி ; பார்ப்பனரை ''வடமொழியாளர்'' (6 : 40) என முன் கூறினமையுங் காண்க. தீர்ந்து வணங்கிய என விகுதி பிரித்துக் கூட்டுக. தமரிற் றீர்ந்து வணங்கிய வடமொழியாட்டியாகிய சாலி யென்க.

¹ மணி. 10 : 30.

14.14

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

80
வார ணாசியோர் மாமறை முதல்வன்
ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான்
பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக்
காப்புக் கடைகழிந்து கணவனை ¹யிகழ்ந்தேன்
²எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி யாடிய வருவேன்

78

உரை

83

வாரணாசி ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனை யான் - காசிப்பதியிலுள்ள வேதமோதுவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி - அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காப்புக் கடை கழிந்து கணவனை இகழ்ந்தேன்-காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், எற்பயம் உடைமையின்-இரவின் அச்சமுடைமையால், இரியல் மாக்களொடு - கெடுதலுற்ற மக்களுடன், தெற்கண் குமரி ஆடிய வருவேன் - தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு வருவேன் ;

காப்புக்கடை கழிந்து என்பதற்கு முன்பு (13 : 5) உரைத்தமை காண்க. 'இழந்தே னெறிபய முடைமையின்' என்றும் பாடம் காணப்படும். இரியல் மாக்கள் என்பதனை இரட்டுறமொழிதலாகக் கொண்டு, விரைந்தேகு மாக்கள் என்றும் உரைத்திடுக.

¹ இழந்தேன். ² எறிபயம்.

14.15

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

85

90
பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க்
காவதங் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக் கிரங்கே னாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்
றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன்
சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்
புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென

84

உரை

91

பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் - பொற்றேரினை யுடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஒரு காவதம் கடந்த பின்னர் ஆயர்களுடைய இருப்பிடத்தில், ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-ஈன்ற சிறு குழவிக்கு இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் - கண்காணாத தோட்டமொன்றில் இட்டு வந்தேன், செல்கதி உண்டோ தீவினையேற்கு என்று - இத்தகைய தீவினையேனுக்குச் செல்கதியும் உண்டோ என்று, அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கிவன்-துன்பமுற்று அழுத அச் சாலியின் மகன் இவன், சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்-இதனைக் கூறாமலிருந்தேன் அங்ஙனம் கூறுவதால் பயன் இல்லாமையின்,

புல்லல் ஓம்பன்மின் புலைமகன் இவன் என - இவனைத் தீண்டாதொழிவீராக அசுத்தமுள்ள கீழ்மகனிவன் என்று கூற ;

ஈன்றேன் ; அங்ஙனம் ஈன்ற குழவிக்கு எனவும், அழுதாள் ; அங்ஙனம் அழுத அவள் மகன் எனவும் அறுத்துரைக்க. செல்கதி-அடையக் கடவதாகிய நற்கதி. அந்தணன் உரைப்பவன் புலைமகன் இவனென்று கூறவென்க. ஓம்பன்மின் - பாதுகாவாதீர் ; செய்யாதீர் என்றபடி.

14.16

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

95

ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து
மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ
சாலிக் குண்டோ தவறென வுரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப

92

உரை

99

ஆ புத்திரன் பின்பு அமர் நகை செய்து - ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் விருப்பத்துடன் சிரித்து, மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ - பெரிய மறைநூலுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைக் கேளும், முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் - பழமறை முதல்வனாகிய பிரமனுக்குத் தெய்வக் கணிகையாகிய திலோத்தமை யினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ, அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் - அரிய மறை முதல்வர்களாகிய முனிவர் இருவரும், புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ-முப்புரி நூலணிந்த மார்பினை யுடையீர் இது பொய் மொழியோ, சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து - இங்ஙனமிருப்பச் சாலிக்குக் குற்றம் உண்டோ என்று கூறி, நான் மறை மாக்களை நகுவனன் நிற்ப - நான்மறை யந்தணரை எள்ளிச் சிரித்து நிற்க ;

அமர் நகை-பொருந்திய நகையுமாம். கேண்மோ : கேளும் என்னும் ஏவற்பன்மை உகரங்கெட்டு ஓகாரம் பெற்று வந்தது. அந்தணர் இருவர் - வசிட்டனும் அகத்தியனும் ; பிரமன் திலோத்தமையைக் கண்ட பொழுதில் வசிட்டனும் அகத்தியனும் கலசத்திற் றோன்றின ரென்பர். அந்தண ரிருவரும் காதலஞ் சிறுவர் என்க.

14.17

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

100

105
ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே
தாதை பூதியுந் தன்மனை கடிதர
ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும்
கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான்சென் றெய்திச்
சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்
தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத்

100

உரை

108

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மறையோதும் அந்தணர்கட்கு இவன் ஒவ்வாதவன் என்று, தாதை பூதியும் தன் மனை கடிதர - தந்தையாகிய பூதியும் தன் இல்லத்தினின்றும் நீக்க, ஆ கவர் கள்வன் என்று-பசுவைக் கவர்ந்த திருடன் என்று, அந்தணர் உறை தரும் - மறையவர்கள் வாழ்கின்ற, கிராமம் எங்கணும் - ஊர்களிலெல்லாம், கடிஞையில் கல்லிட - இவனது பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட, மிக்க சொல்வத்து விளங்கி யோர் வாழும் - பெருஞ் செல்வத்தான் விளக்கமுற்றோர் வாழ்கின்ற, தக்கண மதுரை தான் சென்று எய்தி - தெற்கின்கண் உள்ள மதுரையைத் தான் சென்று அடைந்து, சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில்-சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள, அம்பலப் பீடிகை தங்கினன் வதிந்து!- அம்பலமாகிய பீடிகையிலே தங்கியிருந்து ;

அந்தணர்க்கு-அந்தணருடன் கூடி யிருத்தற்கு. கடிஞை-பிச்சை யேற்கும் கலம். உலகிலே கடிஞையிற் கல்லிடுவார் எஞ்ஞான்றும் இலரென்பர் ; அங்ஙனமாகவும் இவர்கள் இட்டனரென இரங்கியவாறு. யாரும் கடிஞையிற் கல்லிடாரென்பதனை, ¹''நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி, மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த, குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட, கடிஞையிற் கல்லிடுவா ரில்'' என்னும் பழமொழி வெண்பாவானறிக. சிந்தாதேவி - கலைமகள்; அவளுறையுங் கோயிலாகலின் அது கலை நியமம் எனப்பட்டது ; நியமம் - கோயில். அந்தில் : அசை. பீடிகையையுடைய அம்பலத்தி லென்றுமாம்.

¹ பழ. 246

14.18

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

110

115 தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்
காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றானென்.

109

உரை

115

அத் தக்கணப் பேரூர் - அம் மதுரைமா நகரில், ஐயக் கடிஞை கையின் ஏந்தி - பிச்சைப பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி - குற்றமற்ற சிறப்பினை யுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்-குருடர்செவி டர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய, யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி - அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, உண்டு ஒழி மிச்சில் உண்டு - அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, ஓடு தலை மடுத்து - அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை கொள்ளும் காவலன் தான் என்-உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க.

உண்டொழி மிச்சிலுண்டு என்பது ¹'விருந்தோம்பி மிச்சின் மிசைவான்'' என்பதன் பொருளைத் தழுவி வந்துளது. தலைமடுத்து-தலையின்கீழ் அகப்படுத்து. காவலன் - காத்தலை யுடையவன்.

அணியிழை, ஆபுத்திரன் திறம் கேளாய் ; பார்ப்பனி சாலி கழிந்து அஞ்சி வருவோள் இரங்காளாகிக் குழவியை இட்டு நீங்க ஆ கேட்டு அணைந்து நக்கி ஊட்டிப் போகாது ஓம்ப, பூதி யென்போன் கேட்டு உகுத்து என் மகனென்று எடுத்துப் பெயர்ந்து கூடி நவிற்ற, அறிந்த பின் புக்கோன் ஆதுயர் கண்டு உற்று உகுத்து உள்ளங் கரந்து ஒதுங்கி அகன்றோனாய்க் கடவாநின்றுழி, அந்தணரெல்லாம் மாக்களோடு சென்று கையகப்படுத்திக் கேட்ப, நல்லா குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப்போன், 'உரைமோ' என, அந்தணர் இகழ்தலும், ஆபுத்திரன், 'நன்னூலகத்து ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என, ஓரந்தணன் உரைக்கும் ; உரைப்பவன், 'புல்லலோம்பன்மின் ; புலை மகன் இவன்' என, ஆபுத்திரன் நகை செய்து, 'சாலிக்குத் தவ றுண்டோ' என்றுரைத்து நகுவனன் நிற்ப, பூதி ஒவ்வானென்று கடி தர, கிராம மெங்கணும் கல்லிட, மதுரை சென்றெய்தி வதிந்து ஏந்தி மறுகி இசைத்து ஊட்டி மிச்சிலுண்டு மடுத்துக் காவலன் கண்படை கொள்ளும் என வினைமுடிவு செய்க.

¹ குறள். 85.

Linked texts (1)