Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 14.14

Maṇimēkalai urai 14.14

Language
Tamil

14.14

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

80
வார ணாசியோர் மாமறை முதல்வன்
ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான்
பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக்
காப்புக் கடைகழிந்து கணவனை ¹யிகழ்ந்தேன்
²எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி யாடிய வருவேன்

78

உரை

83

வாரணாசி ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனை யான் - காசிப்பதியிலுள்ள வேதமோதுவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி - அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காப்புக் கடை கழிந்து கணவனை இகழ்ந்தேன்-காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், எற்பயம் உடைமையின்-இரவின் அச்சமுடைமையால், இரியல் மாக்களொடு - கெடுதலுற்ற மக்களுடன், தெற்கண் குமரி ஆடிய வருவேன் - தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு வருவேன் ;

காப்புக்கடை கழிந்து என்பதற்கு முன்பு (13 : 5) உரைத்தமை காண்க. 'இழந்தே னெறிபய முடைமையின்' என்றும் பாடம் காணப்படும். இரியல் மாக்கள் என்பதனை இரட்டுறமொழிதலாகக் கொண்டு, விரைந்தேகு மாக்கள் என்றும் உரைத்திடுக.

¹ இழந்தேன். ² எறிபயம்.

Linked texts (1)