Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 14.13

Maṇimēkalai urai 14.13

Language
Tamil

14.13

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

75
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக்
குமரி பாதங் கொள்கையின் வணங்கித்
தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை
யாது நின்னூர் ஈங்கென் வரவென
மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும்

72

உரை

77

நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறை எய்தி-வேத விதிப்படி சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின் திருவடிகளை முறைமையால் வணக்கஞ் செய்து, தமரில் தீர்ந்த சாலி என்போள்தனை - தனக்குச் சிறந்தோரினின்றும் நீங்கிய சாலி என்பவளை, யாதி நின் ஊர் ஈங்கு என் வரவு என - நின் ஊர் யாது நீ ஈண்டு வந்த காரணம் என்ன என்று கேட்க, மாமறையாட்டி வருதிறம் உரைக்கும் - அம் மறையவள் தான் வந்த வரலாற்றைக் கூறுபவள் ;

நடவை - வழி ; வழிச்சேறல். நல்கூர்தல் - ஈண்டு இளைத்தல் ; ¹''நல்கூர் நுசுப்பினை'' என முன் வந்தமையும் காண்க. குமரி - குமரிக் கடலின் மருங்குள்ள தெய்வம் ; கன்னி ; பகவதி. கொள்கை - நோன்புமாம். வடமொழியாட்டி - பார்ப்பனி ; பார்ப்பனரை ''வடமொழியாளர்'' (6 : 40) என முன் கூறினமையுங் காண்க. தீர்ந்து வணங்கிய என விகுதி பிரித்துக் கூட்டுக. தமரிற் றீர்ந்து வணங்கிய வடமொழியாட்டியாகிய சாலி யென்க.

¹ மணி. 10 : 30.

Linked texts (1)