Maṇimēkalai's Renunciation 16.3
Maṇimēkalai urai 16.3
- Language
- Tamil
16.3
பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை
10 மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த
ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து
மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்
9
உரை
14
மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்-முக்காலங்களையும் தெளிவுற நன்கறிந்த தவத்தான் அமைந்த மண்முக முனிவன், அதன் வயிற்று அகத்து-அப் பசுவினது வயிற்றின்கண், மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்உயிர்காவலன் வந்து ஒருவன் தோன்றும் - மழைவளம் பெருகவும் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உயிர்களைக் காப்பவனாகிய ஒருவன் வந்து உதிப்பன், குடர்த்தொடர்மாலை பூண்பான் அல்லன் - அங்ஙனந் தோன்றுவோன் ஊனானாய குடர் மாலையைப் பூண்பானல்லன், அடர்ப்பொன் முட்டை அகவையினான் என - பொற்றகட்டினாகிய முட்டையின் உள்ளிடத்தானாவன் எனவுரைக்க ;
மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு; அவற்றில் நிகழ்வனவற்றை உணர்த்திற்று; ¹',மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய வறிவன்" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலுங் காண்க. தோன்ற - விளங்க ; புலப்பட. உயிர் காவலன் ஒருவன் வந்து என மாறுக. குடர்த்தொடர்-குடரின் தொடர்ச்சி. அடர்-தகடு. அகவை - அடங்கியது ; உள்ளிடம். "குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர், அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்" (25 : 72-3) என்பர் பின்னும்.
¹ தொல். புறத். 20.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil