Maṇimēkalai's Renunciation 16.4
Maṇimēkalai urai 16.4
- Language
- Tamil
16.4
பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை
15
20
25 பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய
மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன்
தற்காத் தளித்த தகைஆ அதனை
ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின்
ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்
கொருதா னாகி உலகுதொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ
இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்
தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
15
உரை
26
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ-அப்பெரியோன் பிறந்த வியல்பினை நீ கேட்பாயாக, பிணிநோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய-பிணியானுண்டாகும் வருத்தம் இல்லாதிருக்கவும் மீண்டும் உலகின்கண்பிறந்து அறஞ்செய்தற்பொருட்டு, மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவ மென்னுந் தீவின்கண் தன் ஆருயிர் துறந்தவனாகிய ஆபுத்திரன், தற்காத்து அளித்த தகை ஆ அதனை-தன்னைப் பேணிப் பாதுகாத்த அழகிய பசுவினை, ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்-தளராத உள்ளத்தின்கண் நீங்காதவனாதலினால், ஆங்கு அவ் ஆ வயிற்று-அம் முனிவன் கூறியவாறே ஆண்டு அப் பசுவின் வயிற்றில், அமரர்கணம் உவப்ப-உம்பர் கூட்டம் உவகை எய்த, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவினுக்கு-இனிய பழங்களையுடைய நாவல் ஓங்கிய இம் மாபெருந் தீவிற்கு, ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்-தான் ஒரு முதல்வனாய் உலகிலுள்ளோர் வணங்கும்படி பிறந்தனன், இருது இளிவேனிலில் - இளவேனிற் பருவத்தில், எரிகதிர் இடபத்து - ஞாயிறு இடப விராசியிலிருக்கும் வைகாசித் திங்களில், ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து - இருபத்தேழு நாண் மீன்களில் பதின்மூன்று சென்றபின், இடைநிலை மீனத்து அகவையில் - நடுவணதாகிய விசாக நாண்மீனின் அகத்தே, போதித்தலைவனொடு பொருந்திய போழ்தத்து-புத்ததேவனுடன் பொருந்திய பொழுதின் கண்ணே ;
தகை - தகுதியுமாம் ; ஒல்கா என்பது வலித்தல் பெற்றது. அம் முனிவன் கூறியவாறே என வருவித்து, பொருந்திய போழ்தத்துத் தோன்றினன் என முடிக்க. இருது - பருவம் ; பெரும் பொழுது. இளவேனில் - சித்திரையும் வைகாசியும். எரிகதிர் - ஞாயிறு. எரிகதிர் இடபம் என்பதனை இடபஞாயிறு என வைகாசிக்குப் பெயராக்குதலுமாம் ; என்னை? அவ்வாறு சிலையெழுத்துக்களில் வழங்குதலின் என்க. வைகாசித் திங்களில் பதின்மூன்று பாகை சென்றபின் எனக்கொண்டு, இடைநிலை மீனம் என்பதனால் விசாகம் கோடலுமாம் ; இப்பொருட்கு மீன்களுள்ளே இடைநிலைமீன் எனக்கொள்ளுதல் வேண்டும் ; பண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டமையின் விசாகம் நடுமீனாயிற்று ; அகவை என்பதனால் விசாகத்தின் இரண்டு மூன்றாங் கால்கள் பெற்றாம். அத்து மூன்றும் சாரியைகள். புத்ததேவன் தோன்றியதும், ஞானம் பெற்றதும் விசாகத்துடன் கூடிய தூய நிறைமதி நாளாகலின் ஆபுத்திரன் பிறந்த அப் பொழுதினைப் போதித் தலைவனொடு பொருந்திய போழ் தென்றார்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil