Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 27.6

Maṇimēkalai urai 27.6

Language
Tamil

27.6

வஞ்சிமா நகர் புக்க காதை

55

பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகார மேழுமேத் துதலின்
துன்பக் கதியிற் றோற்றர வின்றி
அன்புறு மனத்தோ டவன்றங் கேட்டுத்
துறவி யுள்ளந் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றிய மாகுவம்

54

உரை

59

பைந்தொடி தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் - நின் தந்தையுடனே யான் புத்தனது இந்திர விகாரங்கள் ஏழனையும் வணங்கித் துதித்த நல்வினையினாலே, துன்பக் கதியில் தோற்றரவு இன்றி - இன்னல் தரும் இழி பிறப்பிலே தோன்றுதலின்றி, அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு - அன்பு மிகுந்த உள்ளத்துடன் புத்தனது அறவுரைகளைக் கேட்டு, துறவி உள்ளம் தோன்றி - உள்ளத்தே துறவு தோன்றி, தொடரும் பிறவிநீத்த பெற்றியம் ஆகுவம் - தொடர்ந்து வரும் பிறவியை நீக்கிய இயல்பினை யுடையேமாவேம்;

பைந்தொடி முன்னிலைப் பெயர். பகவன் - புத்தன். விகாரம் - கையாற்செய்யப்படாது நினைவினால் ஆக்கப்பட்டது. இந்திர விகாரம்- ஏழு - காவிரிப்பூம் பட்டினத்திலே இந்திரனால் நிறுமிக்கப்பட்ட ஏழ் அரங்குகள்; விசும்பிலியங்குவோராகிய சாரணர் இருந்து, பௌத்தா கமப் பொருளை யாவர்க்கும் அறிவுறுத்துதற்கு இடமாக இருப்பவை; இதனை ¹''பணையைந் தோங்கிய பாசிலைப் போதி, அணிதிகழ் நீழ லற வோன் றிருமொழி, அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும், இந்திர விகார மேழுடன் போகி'' என்பதனால் உணர்க. 'ஏத்துதலின்' என ஈண்டுக் கூறியதனால், கோவலனும் கண்ணகியும் புகார்நகரி லிருந்தபொழுது இவற்றை வழிபட்டார்களென்பது போதரும். தோற்றரவு - தோன்றுதல்; தொழிற்பெயர்; துன்பக் கதியில் தோன்றுதலின்றி என்பதனால் நற்கதியிற் பிறத்தல் பெற்றாம். துறவி - துறவு; திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில் பேராசிரியர் ²''துறவு துறவியென நின்றாற் போல அளவு அளவியென நின்றது'' என எழுதியுள்ளமை காண்க. பெற்றி யென்றது நிருவாணத்தை.

¹ சிலப். 10 : 11-4. ² திருச்சிற். 10.உரை.

Linked texts (1)