Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 27.5

Maṇimēkalai urai 27.5

Language
Tamil

27.5

வஞ்சிமா நகர் புக்க காதை

35

40

45

50

மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானு மெய்துத லொழியாது
உம்ப ரில்வழி யிம்பரிற் பல்பிறப்பு
யாங்கணு மிருவினை யுய்த்துமைப் போல
நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்து மிறந்து முழல்வோம் பின்னர்
மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு
ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும்
தரவரும் பெருமைக் கபிலையம் பதியின்
அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துத்
துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப்
போதி மூலம் பொருந்திவந் தருளித்
தீதறு நால்வகை வாய்மைந் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை யெல்லா மழிவுறு வகையும்
இற்றென வியம்பிக் குற்றவீ டெய்தி
எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும்
அண்ண லறக்கதிர் விரிக்குங் காலைப்

35

உரை

53

மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம் - முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம். அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின் முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது, உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து-உம்பருலகினில் நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின்கண்ணும் இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப்போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற்கரிய பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும் மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும் மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல் வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய பெருமையையுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்து-அளத் தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி-அசைவற்ற புத்தினாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி - அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து - தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன் னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக்கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும் 'வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது;

விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க.அடு சினப் பாவம்-மதுரையை அழித்த சினமாகிய பாவம்; ¹''தன்னையே கொல்லுஞ் சினம்'' என்பவாகலின் அடு சினம் எனப்பட்ட தென்றலுமாம். இருவினை உய்த்து - இருவினையாற் செலுத்தப்பட்டு. திலகம் - திலகம் போல்வது; மேலாயது. கபிலை - கபிலைநகர்; மகதநாட்டின் தலைநகர்; கபிலர் எனப் பெயரிய முனிவரொருவர் முன்பு தவஞ் செய்தற்கு இடமாயிருந்தமையின் இப்பெயர் பெற்றதென்பர். இது கபில வஸ்து எனவும் வழங்கும். பாரமிதை - கரையை அடைவதற்குரியது; பாரம் - கரை; வீடுபேறாகிய கரையை அடைதற்குரிய தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள்., வலி, ஞானம் என்னும் பத்தும் நிரம்பப் பெறுதல். இவை ஒவ்வொன்றும் தானபாரமிதை முதலிய பெயர்களால் வழங்கும். இவை தசபாரமிதை யெனவும், தசபாரமெனவும் கூறப்படும். ²''தானஞ் சீலம்பொறை தக்கதாய வீரியம், ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும், மானமில் லருளினை வைத்தலேவ லிம்மையும், ஞானமீரைம் பாரமிதை நாடுங்கா லிவைகளும்'' ³''தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி, ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே'' என்பன காண்க. போதி - அரசமரம்; என்றது மாபோதியை. நால் வகை வாய்மை - துயரம், துயரத் தோற்றம், துயர நீக்கம், துயர நீக்க நெறி என்பன. பன்னிரு சார்பு - ⁴''பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்'' என்பன. இற்று என்பதனைத் தோற்றத்தோடும் வகை யோடும் தனித்தனி கூட்டுக. அண்ணல் - தலைமை. புத்தனை ஞாயிறாக உருவகித்ததற்கேற்ப அவன் அறிவுறுத்தும் அறங்களைக் கதிராகs உருவகஞ் செய்தார். புத்த ஞாயிறு நிறைத்துத் தோன்றி வந்தருளித் தெரிந்து இயம்பி எய்தி விரிக்குங்காலை யென்க.

¹குறள். 305: ² நீல. மொக்கல. 88.
³ வீர. யாப்பு. 11-உதாரணம். ⁴மணி. 24 : 105-7.

Linked texts (1)