Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 3.3

Maṇimēkalai urai 3.3

Language
Tamil

3.3

ஊரலருரைத்த காதை

20 25

30

35

வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக்
கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும்
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலும்
கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும்
சுந்தரச் சுண்ணமுந் தூநீ ராடலும்
பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும்
காயக் கரணமுங் கண்ணிய துணர்தலும்
கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலராய்ந்து தொடுத்தலும்
கோலங் கோடலுங் கோவையின் கோப்பும்
காலத் கணிதமுங் கலைகளின் றுணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை
நற்றவம் புரிந்தது நாணுடைத் தென்றே
அலகின் மூதூர் ஆன்றவ ரல்லது
பலர்தொகு புரைக்கும் பண்பில் வாய்மொழி
நயம்பா டில்லை நாணுடைத் தென்ற
வயந்த மாலைக்கு மாதவி யுரைக்கும்

18

உரை

37

வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக் கூத்தும் - வேத்தியலும் பொதுவியலும் என்று இருவகைப்பட்ட கூத்தும், பாட்டும்-இசையும், தூக்கும் - தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குக்களும், துணிவும் - தாள வறுதியும், பண்ணியாழ்க் கரணமும்-பண்ணுடன் பொருந்திய யாழின் செய்கைகளும், பாடைப் பாடலும் - அகநாடகம் புறநாடகம் என்பவற்றிற்கு உரிய உருக்களும், தண்ணுமைக் கருவியும் - உத்தமத் தோற்கருவியாகிய மத்தளமும், தாழ் தீங் குழலும் - இனிமை பொருந்திய வேய்ங்குழலும், கந்துகக் கருத்தும்-பந்தாடும் தொழிலும். மடைநூற் செய்தியும் - பாக சாத்திர முறைப்படி அடுதற் றொழிலும், சுந்தரச் சுண்ணமும்-நிறமமைந்த நறுமணப் பொடியும், தூநீர் ஆடலும்-நன்னீராடலும், பாயற்பள்ளியும் - பாயலிடமும், பருவத்து ஒழுக்கமும்-காலங்கட்கேற்ப ஒழுகும் ஒழுக்கமும், காயக்கரணமும்-காயத்தாற் செய்யும் அறுபத்துநான்கு வகைக் கரணங்களும், கண்ணியது உணர்தலும்-பிறர் கருதியதை அறிந்து கொள்ளுதலும், கட்டுரை வகையும் - தொடுத்துக் கூறும் சொல் வன்மையும் கரந்துறை கணக்கும்-மறைந்துறையும் வகையும், வட்டிகைச் செய்தியும் - எழுதுகோலினால் எழில்பட வரையும் தொழிலும், மலர் ஆய்ந்து தொடுத்தலும் - பூக்களை ஆராய்ந்தெடுத்துக் கட்டுதலும், கோலம் கோடலும் - அவ்வப்பொழுதிற்கேற்ப ஒப்பனைசெய்து கொள்ளுதலும், கோவையின் கோப்பும் - முத்து முதலியவற்றைக் கோவையாகக் கோத்தலும், காலணிக்கணிதமும் - சோதிடமும்; கலைகளின் துணிவும் - மற்றமுள்ள கலைகளின் துணிந்த பொருளும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த - நாடகக் கணிகையர்க்கென நன்கு வகுக்கப்பட்ட, ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும் - செவ்விய நூலாகிய புகழமைந்த ஓவிய நூலிற் கூறப்பட்டனவும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை-கற்று அவைகளிற் கைதேர்ந்த பொன்வளையணிந்த மாதவி, நற்றவும் புரிந்தது நாணுடைத்து என்றே - துறவு பூண்டு நற்றவும் செய்வது நாணமுடைத்தாகும் என்று, அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது-இம்மூதூரிலுள்ள அறிவானமைந்த அளவற்ற பெரியோர்கள் அல்லாமல், பலர் தொகுபு உரைக்கும் பண்பில் வாய்மொழி-பலருங்கூடிய கூறும் நலமில்லாத வாய்மொழி, நயம்பாடு இல்லை - இனிதாதல் இல்லை, நாண் உடைத்து என்ற - அதனால் நின்செய்கை நாணுந்தன்மை யுடைத்தாம் என்று கூறிய, வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் - தோழியாகிய வயந்த மாலைக்கு மாதவி கூறூவான் ;

வேத்தியல் - அரசர்க்காடுங் கூத்து ; பொதுவியல் -

எல்லார்க்கும் ஒப்ப ஆடுங் கூத்து ; ¹"வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்து... ஆடலும்," என்பது காண்க. தூக்கு எழினையும், "ஒருசீர்செந்தூக் கிரு சீர் மதலை, முச்சீர் துணிவு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்," என்பதனாலறிக. யாழ்க்கரணம் - பண்ணல் முதலிய எட்டும், வார்தல் முதலிய எட்டுமாம்; இவற்றைச் சிலப்பதிகாரத்துக் கானல் வரியிற் காண்க. தாழ்தல் - தங்குதல். பருவம் - கார்முதலியன. காலக் கணிதம் - சோதிட மாதலை, ²"ஆயுள் வேதரும் காலக் கணிதரும்," என்பதனா லறிக. கலைகள் என்றது பரத்தையர்க் குரியவாகக் கூறப்படும் அறுபத்து நான்கு கலைகளுள் ஈண்டுக் கூறாதொழிந்தனவாகும். பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை, ³"பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்," ⁴ "எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்," ⁵ "யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க்கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்பவற்றானறிக. நன்கனம் - நன்றாக ; இச்சொல், "நன்கன நீத்து," (3 : 88) "நன்கன நவிற்றி" (13-24) "நன்கன மறிந்தபின்" (13 : 26) என இக் காப்பியத்துட் பயின்று வந்துளது. வாய்மொழி நாணுடைத் தெனினுமாம்.

¹ சிலப். 14 : 148-50. ² சிலப். 5 : 44. ³ சிலப். 14:164-7.
⁴ சிலப். 22 - 138-9. ⁵ பெருங். 1. 35 : 84-6.

Linked texts (1)