Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 30.41

Maṇimēkalai urai 30.41

Language
Tamil

30.41

தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

220 சாதாரணஞ் சபக்க விபக்கத் துக்கும்
ஏதுப் பொதுவா யிருத்தல் சத்தம்
அநித்த மறியப் படுதலி லென்றால்
அறியப் படுதனித் தாநித்த மிரண்டுக்குஞ்
செறியுங் கடம்போல் அநித்தத் தறிவோ
ஆகா சம்போ லநித்தத் தறிவோ
என்ன லசாதா ரணமா வதுதான்

217

உரை

223

சாதாரணம் - அநைகாந்திக வேதுப்போலிவகையாகிய சாதாரண அநைகாந்திக மென்பது; ஏது - வாதியாற் கூறப்படும் ஏதுவானது; சபக்க விபக்கத்துக்கும் பொதுவாய் இருத்தல் - சபக்கத்துக்கும் மறுதலையாகிய விபக்கத்துக்கும் பொதுவாய் இருப்பது; சத்தம் அநித்தம் அறியப்படுதலின் என்றால்-சத்தம் அநித்தம் என்ற பக்கவசனத்துச் சாத்திய தன்மமாகிய அநித்துவத்தைச் சாதித்தற்கு அறியப்படுதலால் என்று ஏதுக் கூறினால்; அறியப்படுதல் - அறியப்படுதல் என்னும் அந்த ஏதுவானது; நித்த அநித்தம் இரண்டுக்கும் செறியும் - நித்தமென்று சாதித்தற்கும் அநித்தமென்று சாதித்தற்கும் சென்று பொருந்துதலால்; கடம்போல் அநித்தத்து அறிவோ - கடம்போல அநித்தமென்று அறிவதோ; ஆகாசம்போல நித்தத்து அறிவோ - ஆகாயம்போல நித்தமென்று அறிவதோ; என்னல் - என்று ஐயுறுதற்கு இடமாவது எ - று.

சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் ஏது நிற்பதனால் துணிபொருள் பெறப்படாது பஃறலைப்பட்ட ஐயத்துக்கு இடனாமென்பதை உதாரணத்தின்கட் குறித்தலால், "பொதுவாய் இருத்தல்" என்றொழிந்தார். சபக்கத்தோடு உண்டாகும் பொருத்தம் எத்துணையோ அத்துணைப் பொருத்தமே விபக்கத்துக்கும் உண்டென்பார், அதனை விளக்கும் உதாரணத்தின்மேல் வைத்து, "நித்தா நித்த மிரண்டுக்கும் செறியும்" என்றார். பக்கத்தோடும் சபக்கத்தோடும் சென்றியைதற்குரிய ஏது மிகை பட விரிந்து விபக்கத்தும் சென் றியைவது பற்றி இதனை முதற்கண் நிறுத்தி யுரைத்துள்ளாரெனவறிக. இனி, நியாயப்பிரவேசமுடையார் இவரைப்போல் இதற் கிலக்கணங் காட்டிலராயினும் இவர் காட்டிய உதாரணமே¹ யெடுத்தோதுகின்றார். பிரசத்தபாதரும் சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் இயையும் ஏது சாதாரணமாம் என்றும், இஃது ஐயத்துக்கிடனாவதென்றும் கூறி, "இது பசு, கொம்புடைமையால்" என்று உதாரணமும்² காட்டுகின்றார்.

¹ நியா. பிர. பக். 3. 18-21. ² பிரசத்த. பாடி. பக். 228.

Linked texts (1)