Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 4.18

Maṇimēkalai urai 4.18

Language
Tamil

4.18

மலர்வனம் புக்க காதை

105

110

115
கணவிரி மாலை கட்டிய திரணையன்
குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன்
சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்
வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப்
பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு
அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம்
தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும்
ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மைய லுற்ற மகன்பின் வருந்திக்
கையறு துன்பங் கண்டுநிற் குநரும்

104

உரை

115

கணவிரி மாலை கட்டிய திரணையன்-அலரிப்பூவால் திரணையாகக் கட்டப்பட்ட மாலையை யுடையனாய், குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்-எருக்கினது குவிந்த முகைகளாற் கோக்கப் பெற்ற தாரினை யுடையனாய், சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-சிதரின துணியோடு வானிலே உயரந்த பெரிய மரக் கிளைகளிலுள்ள செறிந்த சுள்ளிகளை ஒடித்துக் கட்டிய உடையை யுடையனாய், வெண்பலி சாந்தம் மெய்முழுது உறீஇ-வெண்ணீறுஞ் சந்தனமும் உடல் முழுதும் பூசிக் கொண்டு, பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு - பயனில்லாத சொற்களைப் பலரொடுங் கூறிக் கொண்டு, அமூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்-அழுதும் விழந்தும் அரற்றியும் கூவியும், தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் - தொழுதும் எழுந்தும் சுழலுதலைச் செய்தும்,. ஓடலும் ஓடும் - ஓடியும், ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும்-ஒரு பக்கமாக ஒதுங்கி நெடிது நின்றும், நிழலொடு மறலும்-நிழலுடன் பகைமை கொண்டும் நிற்கின்ற, மையலுற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டு நிற்குநரும்-பித்துற்றவனது செயலற்ற துன்பத்தினைக் கண்டு வருந்தி அவன் பின்னே நிற்போரும்;

கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. ததர்-கொத்துமாம்; ¹"சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்" என்பம் காண்க. வெண்பலி-வெண்ணீறு; சாம்பல். வெண்பலியாகிய சாந்தமெனக் கொண்டு வல்லொற்று விகாரத்தாற் றொக்க தெனினுமாம். சுழலலும் சுழலும்-சுழலுதலையும் செய்யும்; பின்வருவனவற்றிற்கும் இங்ஙனம் பொருள் கொள்க; ²"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதூஉம் அது. அழூஉம் முதலியவற்றை வினையெச்சப்படுத்து, நிற்கின்ற என ஒரு சொல் விரித்து முடிக்க; இனி, மையலுற்ற மகன் என்பதனை எழுவாயாக்கி, அழூஉம் முதலிய வினைகளோடு தனித்தனி முடித்து, அவன் என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம்.

¹ சிறுபாண். 254-5. ² சிலப். 22-154.

Linked texts (1)