Maṇimēkalai's Renunciation 4.19
Maṇimēkalai urai 4.19
- Language
- Tamil
4.19
மலர்வனம் புக்க காதை
120
125 சுரியற் றாடி மருள்படு பூங்குழல்
பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை
ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக்
கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல்
காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை
அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்
116
உரை
125
சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும் இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள வாள்நகை- பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர் போலுஞ் சிவந்த கையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய அழகிய இளங்கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும், இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும், எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில் நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக்கோலத்துப் பேடு காண்குநரும் - பேடிக் கோலத்தையுடைய பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்:
சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலியவற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவதனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும்.
"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். ¹"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" ²"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பணித்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன.
¹ சில்ப. 6 : 567. ² சிலப். 27 : 181-6.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil